திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (70). இவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகக்கூறி, திண்டுக்கல் மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு ராஜாஜி கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மதுரையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மூன்று நாள்களாக சிகிச்சையளிக்காமல் பரிசோதனை அறிக்கைக்காக காக்க வைக்கப்பட்டுள்ளார். தாமதாக கிடைத்த அறிக்கையில், இப்ராஹிமுக்கு தொற்று இல்லை என வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று (ஜூலை 29) காலை அவர் திடீரென உயிரிழந்ததால், அதிர்ச்சியடைந்த அவருடைய மகன் சிக்கந்தர், மருத்துவமனை எதிரே சாலையில் அமர்ந்து உறவினரிடம் தொலைபேசியில் கதறி அழுது கொண்டே பேசும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் அதிக நாட்கள் காக்க வைக்கப்படுகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார், சிக்கந்தர்.