திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல் மலை மற்றும் கீழ் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ருட், கேரட் என பல வகையான காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனிடையே சில வாரங்களாக கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பயிரிட்டுள்ள காய்கறிகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் செடிகளில் விட்டுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், காய்கறிகள் அனைத்தும் அழுகியும் வருகின்றன.
அத்தோடு, விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்டமுடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, சேதமடைந்த காய்கறிகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்புடைய வேளாண்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.