திண்டுக்கல்: பழனி அருகே காளிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சதாசிவம். இவர் மஞ்சநாயக்கன்பட்டி செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காளிபட்டி செங்குளத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற திமுக துணை தலைவர் மோகனபிரபு, திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் மண் அள்ளுகின்றனர். கடந்த சனிக்கிழமை எனது மகன் கலை கௌதம் மற்றும் அவனது நண்பர்களுடன் சென்று போட்டோ எடுத்தேன். அப்போது தகராறு ஏற்பட்டது.
8 பேர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் எனது மகன் கலை கௌதம், கவியரசு, மனோஜ், ஓடை ஈஸ்வரன், வனசேகர், கார்த்தி, ராஜேஷ் உள்ளிட்ட 8 பேர் மீது சத்திரப்பட்டி காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்" என்றார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி மற்றும் ஆயக்குடி காவல் துறையினர் சதாசிவத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர் செல்ஃபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
அனுமதியோடு மண் அள்ளப்படுகிறது
மேலும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, "மஞ்சநாயக்கன்பட்டி மயானம் முதல் காளிபட்டி செங்குளம் வரையுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை இல்லை. அங்கு பாதை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியோடு பாதை அமைக்க தேவையான கிராவல் மண் அள்ளப்பட்டது.
பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் பாதை அமைக்கும் பணியை தடுத்து தகராறில் ஈடுபடுகின்றனர். சதாசிவம் தான் கைதாகப் போவதை அறிந்து செல்போன் கோபுரம் மீது ஏறி நாடகமாடுகிறார்" என்றார்.
இதையும் படிங்க: தனியார் பேருந்து ஓட்டுநர் மீது பாஜக வழக்கறிஞர்கள் தாக்குதல்?