திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயியான இவருக்கு அதே பகுதியில் இரண்டு ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. இந்நிலையில், காப்பிலியபட்டி திமுக பஞ்சாயத்து தலைவி சிவபாக்கியம், இவரது கணவர் ராமசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
ராமசாமி, மாரிமுத்துவுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே 30 ஏக்கர் நிலத்தை தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தி வருகிறார். இந்தநிலையில், அந்த நிலத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாத காரணத்தால் மாரிமுத்துவுக்கு சொந்தமான பூர்வீக நிலம் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை: இதனால் வேதனை அடைந்த மாரிமுத்து தனது அண்ணன், அண்ணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதற்கிடையே கடந்த 27ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
முதலமைச்சரின் தனி பிரிவிற்கும் இந்த புகார் சென்றுள்ளது அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று (மே 2) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர் தீக்குளிக்க முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 12 பேரையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு 12 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!