திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இயங்கி வரும் ஆர்.சி மெட்ரிக் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருபவர் ராஜவர்ஷினி. இவர் ஊராளிபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் ஆவார்.
கேரம் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், நத்தத்தில் நடைபெறவிருக்கும் மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான குறுவட்ட கேரம் போட்டியில் பங்கேற்பதற்கு பள்ளி சார்பாகத் தேர்வு செய்யப்பட்டவர்.
இந்நிலையில், ராஜவர்ஷினி இந்த ஆண்டுக்கான பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக கேரம் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து பள்ளியின் தாளாளர் பீட்டர்ராஜை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு மாணவியை விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதாக பள்ளி சார்பில் கூறப்பட்ட பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
திறமையுடன் கல்விக்கட்டணம் செலுத்த பணம் இருந்தால் தான் எதிலும் சாதிக்க முடியும் என்ற நிலைக்கு கல்வி சென்றுள்ளது பெற்றோர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.