தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களில் இருக்கும் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் இந்த ஆண்டு தமிழ்நாடரசின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் ஆற்றங்கரையில் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் நாள் தொடங்கிய இந்த யானைகள் முகாமில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள கோயில்கள், மடங்கள் போன்றவற்றிற்கு சொந்தமான யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. மேலும் 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் யானைகளுக்கு உடல் பரிசோதனை, சத்தான உணவு, நடை பயிற்சி உள்ளிட்டவைகள் கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்டன.
தற்போது முகாம் நிறைவடைந்துள்ள நிலையில் பயிற்சிக்கு சென்ற மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், திருக்கடையூர் கோயில் யானை அபிராமி, பழனி கோயில் யானை கஸ்தூரி, ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி உள்ளிட்ட யானைகள் மீண்டும் கோயிலுக்கு திரும்பின. இந்த யானைகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக மேளதாளத்துடன் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
54 வயதாகும் பழனி கோயில் யானை கஸ்தூரி 14 முறை இந்த சிறப்பு நல்வாழ்வு முகாமில் கலந்துகொண்டுள்ளது. மேலும் அங்கு வழங்கப்பட்ட சிறப்பு சிகிச்சையின் காரணமாக 4 ஆயிரத்து 640 கிலோ எடையுடன் சென்ற கஸ்தூரி யானை நூறு கிலோ எடை குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் திரும்பியிருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 3 ஆயிரத்து 680 கிலோ எடையுடன் சென்ற ராமலட்சுமி யானை 370 கிலோ எடை அதிகரித்து 4 ஆயிரத்து 50 கிலோ எடையுடன் உடல் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: