திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் இழுவை ரயில் பெட்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனைப் பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான சந்திரமோகன் தனது சொந்த நிதியிலிருந்து நவீன மின் இழுவை ரயில் பெட்டியை இன்று (ஜன.23) வழங்கியுள்ளார். மலைக்கோயிலுக்கு மேலே செல்ல வசதியாக ஏற்கனவே, மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இவற்றில் 30பேர் வரை செல்லும் வகையில் உள்ளது.
இந்த நவீனமான புதிய மின் இழுவை ரயில் பெட்டியில் 72 பேர் வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே பழனி கோயிலில் மட்டுமே மின் இழுவை ரயில் சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1965ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் முதல் மின் இழுவை ரயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மின் இழுவை ரயில் கடந்த 1982ஆம் ஆண்டும், மூன்றாவது மின் இழுவை ரயில் கடந்த 1988ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பழனி முருகன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சார்பில் இந்த புதிய நவீனமான மின் இழுவை ரயில் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள மின் இழுவையில் பெட்டியானது பக்தர்கள் சேவைக்கு வருவதற்குச் சிறிது நாட்கள் ஆகும் என்றும் பெட்டியின் அமைப்பை பொறுத்து சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே தைப்பூசம் நிறைவடைந்த பிறகே இந்த புதிய மின் இழுவை ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று காலை பழனி மலைக்கோயிலில் உள்ள உபகோயில்களில் கலாகர்சனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி கோயில் அறங்காவலர்கள், இணை ஆணையர் உள்ளிட்ட கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.