நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ உபகரணங்கள் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் நெய்க்காரப்பட்டி லயன்ஸ் கிளப் மற்றும் ராஜரத்தினா அறக்கட்டளை சார்பாக மூன்று லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கட்டில், வயர் கட்டில், மெத்தை, ஆக்சிஜன், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், புளோமீட்டர் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது பட்டய தலைவர் மயில்சாமி, மாவட்ட தலைவர் சுப்புராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களான வடிவேல், மனோகரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார், சித்த மருத்துவர் மகேந்திரன் ஸ்ரீதர், சதீஷ்பாபு, டால்ஸ்டாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியதற்காக, நெய்க்காரப்பட்டி லயன்ஸ் கிளப் மற்றும் ராஜரத்தினா அறக்கட்டளை நிறுவனங்களுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மருத்துவர் உட்பட 2 பேர் கைது