தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனையடுத்து ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக கொறடா சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி, "ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் அந்த இடத்திலேயே அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்" என்றார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.