திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரூ. 58 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனி நகரின் முக்கிய வீதிகளான ரயில் நிலைய சாலை, பூங்கா ரோடு, மலையடிவாரம் செல்லும் சாலை, புது தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பணி நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் என்பதால் நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் துணையோடு தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் சாக்கடைகள் கட்டப்பட்டு சில நாட்களில் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது. மேலும், சாலைகளானது மழை நீரில் அடித்துச் செல்ல கூடிய வகையிலும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை கண்டிக்கும் வகையில், பழனி நகரில் திமுகவினர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர், கரோனா அச்சமின்றி தகுந்த இடைவெளியில்லாமலும், சிலர் முகக் கவசம் அணியாமலும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலை துறை அலுவலர்களை கண்டித்தும், தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் கண்டித்தும், ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி மாணவர்கள் சேர்ப்பு - அரசுப் பள்ளிகள் மீது தனியார் பள்ளிகள் குற்றச்சாட்டு