திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புளியமரத்துக்கோட்டை ஊராட்சி நவாலூத்து கிராமத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என்று பிரத்யேகமாக குடிதண்ணீர் தொட்டிகள் கிடையாது. கடந்த 15 நாள்களாக மோட்டார் பழுது என கூறி நவாலூத்து கிராமத்திற்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அனைவரும் புளியமரத்துக்கோட்டை ஊராட்சித் தலைவர் தங்கராஜிடம் தண்ணீர் வழங்கக் கேட்டனர்.
அதற்கு அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு உங்கள் கிராமம் முழுவதும் வாக்களிக்கவில்லை. அதனால் ”யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம் போய் கேளுங்கள் தண்ணீர் வேண்டும் என கேளுங்கள்" என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
தற்போது 150 ஆதிதிராவிடர் குடும்பங்களும் தண்ணீருக்காக தோட்டம், காடு என பல இடங்களுக்குச் சென்று தண்ணீருக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் 7 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் 36000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. ஆனால் 150 பேர் வசிக்கும் பகுதிக்கு ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகூட இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 5 முறை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக கொரடாவாகவும் சக்கரபாணி உள்ளார். அவர் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் பற்றி துளியும் கண்டுகொண்டதில்லை, வாக்கு சேகரிக்க மட்டும் இப்பகுதிக்கு வருவார். மற்றபடி அவரை கனவில்கூட காண முடியாது. தற்போது திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய அத்தியாவசிய பொருள்கள்கூட எங்கள் கிராமத்திற்கு வழங்க மறுத்து விட்டனர்.
எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலரிடம் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீர்நிலைகள் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர்கள்