திண்டுக்கல்: திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி ஏற்று திண்டுக்கல் வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர்.
அப்போது அண்ணா சிலை அருகே அரசு மருத்துவமனைக்கு எதிராக போக்குவரத்து விதிகளை மீறி வலது புறமாக வாகனத்தை செலுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்ட பொழுது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் காரை பின்தொடர்ந்த மற்றொரு வாகனம் அதிவேகமாக புறப்பட்டதால் அந்த சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது காரின் முன் சக்கரம் ஏறியது.
இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் கீழே விழுந்தனர். கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் முன்பகுதி சேதமடைந்தது. அந்த தம்பதியினரை அங்கு இருந்த திமுகவினர் காப்பாற்றாமல், அமைச்சர் வாகனம் வருவது கூட தெரியாமல் உள்ளே வருகிறாயா என சத்தமிட்டனர்.
திமுகவினர் பொதுமக்களின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது ஒருபுறம் இருந்தாலும் மனித நேயத்தை மறந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதை கூட கவனிக்காமல் சென்ற அமைச்சர்களின் செயல் பாதிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்தும் வகையில் இருந்தது.
இதையும் படிங்க: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்