திண்டுக்கல்: கடந்த 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணமடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக களம் கண்டது. அதேநேரம் இந்தத் தேர்தலில்தான் இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு வழங்கப்பட்டது.
இந்த இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இவர் பெரிய கருப்பத் தேவர் - பெருமாயி தம்பதிக்கு 15 அக்டோபர் 1935 ஆம் ஆண்டில் உசிலம்பட்டி அருகே உள்ள டி. உச்சப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
பள்ளிக்கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகறிராகவும் பணிபுரிந்தவர்.
இதனையடுத்து அதிமுக எம்பியாக தேர்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 1980 ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்து எம்பியானார். திமுகவில் தீவிர அரசியலில் இருந்த மாயத்தேவர், பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக திண்டுக்கல் சின்னாளபட்டியில் வசித்து வந்த அவர், இன்று தனது 88 வது வயதில் (ஆகஸ்ட் 9) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாயத்தேவரின் உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுக அடுத்த கட்ட நகர்வு குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை!