தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்னும் மூன்று நாள்களுக்குள் முடிவடைய உள்ளது. இதையொட்டி இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தூத்துக்குடி ராஜபாண்டி நகர், சத்யா நகர், பெரியசாமி நகர், செல்சீனி காலனி, 3 சென்ட், வள்ளிநாயகபுரம் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் தேர்தல் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடையில்லாமல் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நிறைவுபெற்றால் மட்டுமே உறுப்பினர் மூலமாக அரசின் நலத்திட்டத்தைத் தடையில்லாமல் எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும்.
சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!
ஆகவே அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக மக்கள் பயன்பெற திமுக தலைவரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறது. எனவே நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம், சொல்வதைத் தான் செய்வோம்.
ஆட்சிப் பொறுப்பேற்றதுமே மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, ஆவின்பால் விலை ரூ.3 குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை ரூ.3 குறைப்பு, மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் என அனைத்தையும் செயல்படுத்தியுள்ளது. ஆகவே மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியின் சலசலப்புக்கு அஞ்சாது!
கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுகவினர் இழுத்தடிப்புச் செய்துவந்த நிலையில் தற்போது எந்தச் சாதனையை வைத்துக் கொண்டு வாக்குச் சேகரிக்கவருகிறார்கள் எனத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சியினர் மக்களைக் குழப்பி குட்டையில் மீன்பிடிக்க நினைக்கலாம்.
மக்கள் அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம். திமுக இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஆகவே நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: LIC IPO: 'நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டும்; விற்கக்கூடாது' - ஸ்டாலின்