திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பஞ்சம்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாகன பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பரப்புரையில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த திமுகவினர் திமுகவை குறித்து பேசக்கூடாது எனக்கூறி அவரை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் நாம் தமிழர் கட்சியினர் வாகனத்திலிருந்த ஒலி பெருக்கிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலை காணொலி எடுத்த மூன்று பேரின் செல்போன்களையும் உடைத்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னாளபட்டி காவல் துறையினர் இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சைமன் ஜஸ்டின் பஞ்சம்பட்டிக்கு வந்து இதுபோன்ற தகராறுகளை திமுகவினர் திட்டமிட்டுச் செய்வதாகவும், திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமியைத் தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தரையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.