திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சில மாதங்களாக மனநோய் மற்றும் சர்க்கரை நோய் மாத்திரைகள் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதியுறுவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மனு அளித்த காளிமுத்து கூறுகையில், “திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
ஆனால் இங்கு வரும் மக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாமல், வெகு நேரம் காத்திருக்கும்படி செய்கின்றனர். அதுமட்டுமின்றி நோயாளிகள் தங்களுக்கான மாத்திரைகளைக் கேட்டால் இல்லை என்று கூறி அனுப்பப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக மன நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் கையிருப்பு இல்லை என்று கூறி பலமுறை அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்.