திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காலங்காலமாக பளிய, புலையன் என்ற பழங்குடியினர் அப்பகுதி முழுவதிலும் வாழ்ந்துவருகின்றனர்.
பளியர் மக்களுக்கு பட்டியலின (எஸ்.டி.) சான்றிதழ் வழங்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மலைக் கிராமங்களில் முதல்முறையாக பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளதால் படித்த பெண்கள் கிராம ஊராட்சியில் வேட்பாளராகக் களம் இறங்கவுள்ளனர்.
ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய முக்கிய ஆவணமாகச் சாதி சான்றிதழ் தேவைப்படுவதால் தங்களுக்கு பட்டியலின சாதி சான்றிதழ் இல்லாததால் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பழங்குடியினரின் மாவட்டத் தலைவர் கூறுகையில், "சுமார் 700-க்கும் மேற்பட்ட பளியர் மக்களுக்கு இன்னும் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. தற்போது தேர்தலில் பழங்குடியின மக்கள் அதிகளவில் போட்டியிட இருப்பதால் சாதி சான்றிதழ் உடனே வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்படுமானால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: உள்ளாட்சி உங்களாட்சி 13 - நீர் மேலாண்மை