நாடு முழுவதும் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல் துறை 'காவலன்' என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அச்செயலி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம். கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கலந்துகொண்டு காவலன் செயலி எவ்வாறு பெண்களுக்கு உதவும் என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
இது குறித்து மாணவிகளிடையே பேசிய சக்திவேல், "தற்போதைய சூழலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறையால் தனித்துவமாக காவலன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. குழந்தைகூட சுலபமாகப் பயன்படுத்திடும்.
ஆதலால் இதைப் பயன்படுத்துவதில் பெண்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது. எனவே அனைத்து பெண்களும் தங்களது கைபேசியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திட வேண்டும். பாதுகாப்பு இல்லாத இடம் என்று பெண்கள் உணரும்பட்சத்தில் இந்தச் செயலியை பயன்படுத்துவதன் மூலம் 15 நிமிடத்தில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து உதவிடுவர்" என்றார்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், பெண்கள் தங்கும் விடுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பெண்களைக் காக்கும் 'காவலன்' செயலி: களத்தில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்!