திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 20) ஒரே நாளில் 78 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 680ஆக உயர்ந்துள்ளது. இதில் 765 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, நாளுக்கு நாள் அரசு அலுவலர்களும் கரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி செயற்பொறியாளருக்கு கரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நத்தம் மின்வாரிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள் 10 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யபடவுள்ளது. மேலும், மின் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தும்பொருட்டு இரண்டு நாள்களுக்கு மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது.