திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்தியாநகர் பகுதியை சேர்ந்தவர் தான் மருத்துவர் இலக்கியா. அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் இலக்கியாவின் தாத்தாவான சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது.
வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வது, தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவது, டீ கடையில் இரட்டை குவளை முறை என சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் அனுபவித்தவர்.
சின்னப்பெத்தனின் மகனும் இலக்கியாவின் தந்தைதான் சுந்தரம், சைக்கிளில் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார்."சம்சாரி வீட்டு பெண்கள் பழைய பொருள்களை விற்கும்போது, 'ஏம்பா நீ குடியானவனா?'’என்று கேட்பார்கள். நானோ 'என்னம்மா நீங்க? பழைய பொருளை விக்கிறதுக்கு ஜாதியெல்லாம் கேட்கிறீங்க? நான் அருந்ததியர்ம்மா' என்பேன்.
அவ்வளவுதான். முகத்தைச் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள் அந்தப் பெண்கள்" என்று தனக்கு நேர்ந்த சாதிய கொடுமை அனுபவங்களை தெரிவிக்கிறார் சுந்தரம்.
இலக்கியாவின் பாட்டி சுப்பம்மாள் வேலை பார்த்துவந்த வீட்டிற்குச் சென்று ஒத்தாசையாக சில வேலைகளை செய்துவந்த அவருக்கு கொட்டாங்கச்சியில் டீ கொடுத்துள்ளனர். அப்படி டீ கொடுத்த பெண் இன்று இலக்கியாவை இப்போது வாஞ்சையுடன் அழைத்துப் பேசுகிறார். வீட்டு சோபாவில் அமர வைத்து டம்ளரில் டீ யும் தருகிறார். இந்த மரியாதை இலக்கியாவுக்கு கிடைத்தற்கு காரணம் அவர் மருத்துவர் என்பதாலேயே.
"அப்ப அவளுக்கு மூணு வயசுக்கூட இருக்காது. காணமா போயிட்டா நாங்களும் பதறிப்போய் அலைஞ்சு தவிச்சுப்போனோம். அப்போ, 'பால்வாடி டீச்சர் இவ்ளோ சின்ன வயசுல படிக்க வந்துட்டான்னு' சொல்லி வீட்டுல விட்டுவிட்டுப்போனாங்க.
அப்போவே, இவளுக்கு படிக்க ஆர்வம் இருக்குன்னு எங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. பொறந்த சாதியால அவமானப்பட்டு வாழறது வெறுத்துப்போய் நானும் நல்ல படிக்கனும்னு ஆசைப்பட்டேன்.
ஆனா, வீட்ல வசதியல்லாததால படிப்பு நிப்பாட்டிடு மாட்டுத்தரகர் வேலை பார்த்தேன். அதுல நஷ்டமாகி தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு போயிட்டேன். அப்புறம்தான் ஆதித்தமிழர் பேரவை அதியமான் ஐயா பண்ணுன உதவியால இந்த பழைய இரும்பு வியாபாரம் பாத்து பொழைக்க ஆரமிச்சேன்.
சின்ன வயசுல இருந்தே எம்மககிட்ட சொல்லுவேன். கேவலப்பட்டு வாழுறது எங்களோட போகட்டும்; நல்லா படிச்சாதான் இந்த உலகம் உன்னை மதிக்கும்னு. அவளும் அத மனசுல வைச்சு நல்லா படிச்சு இப்ப டாக்டராயிட்டா. என் கனவு நிறைவேறிடுச்சு" என்கிறார் சுந்தரம் பெருமித்தோடு.
முதலில் பேசத்தயங்கிய இலக்கியா, மருத்துவரானது எப்படி என்கிற நெகிழ்ச்சியான சம்பவங்களை கொட்டித் தீர்த்துவிட்டார் நம்மிடம். "நான் டாக்டர் ஆனதுல எங்கப்பா அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவருக்கு புள்ளையா பொறந்து, அவரு மனச நிறைய வைக்க என்னால முடிஞ்சிருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் ரெம்ப பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மொதல்ல எங்க டீச்சர்ஸ் சிலம்புச்செல்வி, சாந்திக்கும். அப்புறம் ஐயா கலைஞருக்கும்(கருணாநிதி). 2009-ல அவரு முதலமைச்சரா இருக்கும்போதுதான் அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடுங்கிறது சட்டமாச்சு. அப்ப கலைஞர் ஐயா குறிப்பிட்டு சொன்னது என் மனசுல நல்லா பதிஞ்சு போச்சு. 'அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாக கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள்'ன்னு அருந்ததிய மக்களைப் பத்தி உருக்கமா சொன்னாரு.
எங்க மக்கள் புதிய உலகம், புரட்சியுகம் காண வேணும்னுதான் உள் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவை அவையில வச்சாரு.
அப்போதான் எனக்கும் ப்ளஸ் 2 ரீசல்ட் வந்துச்சு. 1085 மார்க் எடுத்திருந்தேன். 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டுல தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி எனக்கு சீட் கிடைச்சது. இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லைன்னா நான் டாக்டர் ஆயிருக்கமுடியாது.
சாதி பார்க்காம உதவுற எத்தனையோ நல்லவங்களும் இருக்காங்க. நான் கவுன்சிலிங்க் போறதுக்கு மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணுங்கிறவர் அவரோட மனைவி நகையை அடகு வச்சு 10 ஆயிரம் ரூபாயை எங்கப்பாகிட்ட கொடுத்தாரு. 17 ஆயிரம் ரூபாய் தந்து காலேஜ் ஃபீஸ் கட்டினது எம்.எல்.ஏ. சக்கரபாணி ஐயா தான்.
என் அனுபவத்துல சொல்றேன். எந்த சமுதாயத்துல பிறந்தாலும் படிச்சு ஒரு நல்ல நிலமைக்கு வந்துட்டா இந்த ஊரும் உலகமும் சாதி பார்க்காம நம்மல மதிக்கத்தான் செய்யும். அதே நேரத்துல எங்க சமுதாய மக்கள் சாதிக்கொடுமையால் ஒடுக்கப்பட்டு வேதனையில துடிச்சிட்டிருக்கிறது உண்மைதான்.
அவங்க படிச்சு முன்னேறனும்னா கல்வி ரொம்ப ரொம்ப அவசியம். நான் ஒரு டிரஸ்ட் ஆரமிச்சு எங்க மக்களுக்கு நல்ல கல்விகிடைக்க என்னால முடிஞ்ச உதவியைச் செய்யணும்கிற திட்டம் மனசுக்குல ஓடிக்கிட்டு இருக்கு. எல்லா மனுசங்களும் ஒண்ணுதான். இதுல சாதியெல்லாம் எங்கேயிருந்து வந்து தொலைச்சுச்சோ? ஒரு டாக்டரா இருந்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
என்னோட வாழ்நாள் முழுவதும் அதை நல்லபடியா செய்வேன்" என்றார் உறுதியான குரலில். பிறப்பின் அடிப்படையில் கீழ் ஜாதி, தொடக்கூடாதவன், எட்டி நிற்க வேண்டியவன், படிக்கக் கூடாதவன், கோயில் கருவறைக்குள் நுழையக்கூடாதவன், எல்லோருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாதவன், எல்லோருடனும் சமமாக திருமணம் செய்துகொள்ள முடியாதவன் என்றெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சிந்தனை உடையவர்களாக, சாதிய சிந்தனையை விட்டுவிட முடியாதவர்களாக பலரும் இருக்கிறார்கள்.
அதனால்தான், சமூக நீதிக்கான போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இலக்கியா போன்றவர்களோ நம்பிக்கை நட்சத்திரங்களாக நம் கண் முன்னே மிளிர்கிறார்கள்.
இதையும் படிங்க: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு