‘காடு’. இந்தச் சொல்லுக்குள் இருக்கும் பிரமாண்டமும், அமைதியும், உயிர்களும் எப்போதும் அதிசயிக்க வைப்பவை. போட்டி, வஞ்சம், வன்மம் என எதையுமே கொண்டிருக்காமல் வன உயிர்கள் அதனதன் பாதையில் எந்தவித தொல்லையும் கொடுக்காமல் சென்றுகொண்டிருப்பவை. பொதுவாக வன உயிர்களைக் காண வேண்டும் என்ற ஆசை மனிதர்களிடத்தில் பெருமளவில் ஊற்றெடுக்கும். அந்த ஆசை பலருக்குக் கைகூடுவதில்லை. ஆனால், வன உயிர் புகைப்படக்காரர்களுக்கு அது கண்கள் மேல் கேமரா தந்த கலை. முக்கியமாக வனங்களையும், வன உயிர்களையும் அவர்கள் காண்பதில்லை - உணர்வார்கள். காண்பதற்கும், உணர்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் ஏகப்பட்ட ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் அவர்களால் வன விலங்குகளுக்கோ, வனத்திற்கோ எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை.
இங்கு ஒரு மனிதனை சக மனிதன் கண்டுகொள்ளாமல், வாழ்வியலை மதிக்காமல் இருக்கும் சூழலில், வன உயிர் புகைப்படக்காரர்கள் என்பவர்கள் ஒரு உயிரை மதித்து அதன் வாழ்வியலை பதிவு செய்பவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை என்பதை முழுதாய் உணர்ந்தவர்கள் அவர்கள்தான். அடர்ந்த காடுகளில் அப்படி ஒரு அசாத்திய பயணம் மேற்கொண்டு நம்மை தனது அனுபவங்களின் வாயிலாக அதிசயிக்க வைக்கிறார் வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன்.
செந்திலின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம் பாலராஜக்காப்பட்டி. தந்தை அரசு அலுவலர், தாய் ஆசிரியை. இருவரும் பொறுப்பு மிகுந்த பணியில் இருந்ததால் சிறு வயது முதலே கண்டிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார் செந்தில். அவரது தாயின் ஆசைப்படி தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற இலக்குடன் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்தார். பின்னர் பெட்ரோல் பங்குகளுக்கு தேவைப்படும் பெரிய கன்டெயினர் தயாரிக்கும் தொழிலை தனக்கு சொந்தமான இடத்தில் தொடங்கினார்.
பொறியியல் படித்துவிட்டு தொழில் முனைவோராக தனது வாழ்க்கையை தொடங்கிய செந்தில் வன உயிர் புகைப்படக்காரராக ஏன் மாறினார். அவர் கூறும் விஷயங்கள் அதிசயிக்க வைப்பதோடு மட்டுமின்றி வனம், வன உயிர்கள் குறித்த புரிதலையும் நமக்கு ஏற்படுத்துகின்றன.
தனது பயணம் குறித்துப் பேசத் தொடங்கிய செந்தில் , “கிராமத்தில் பிறந்ததால் இயற்கையோடும். கால்நடைகளோடும் அதிகம் பயணிக்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டின் உள்ளே தென்னை, வாழை, வேம்பு மரங்கள், ஆடு, மாடு, கோழி என எங்களுடன் அவைகளும் உறவுகள்போல வளர்ந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது. இப்படி வளர்ந்ததால் எனக்கு எப்போதுமே இயற்கை மீதும், வன உயிர்கள் மீதும் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. இதனிடையே ஒரு பொறியாளராக, தொழில் முனைவோராக பல பொறுப்புகளுடன் வேலை சார்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பயணப்பட வேண்டியிருந்தது. அதற்காக பயணிக்கும்போது சாலை மார்க்கமாக செல்வதை விரும்பினேன். அவ்வாறு போகையில் பல மாநிலங்களில் உள்ள காடுகளுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் பயணிப்பது வழக்கமானது. அப்போது முதன்முதலாக எனது செல்ஃபோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தேன். மான், யானை என படம் எடுக்க ஆரம்பித்ததும் கேமரா வாங்கவேண்டும் என்ற ஆசை தோன்றி எனது தேடலின் தீவிரத்தை உணர்த்தியது. பின்னர் முழுவதுமாக இதை செய்ய முடிவு செய்து புது கேமரா வாங்கினேன்.
புலிகளின் கம்பீரத்தை காண்பது எப்போதும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அதனாலோ என்னவோ நான் அதிகம் காட்சிப்படுத்தியது புலிகள்தான். அதன் அடர் நிறமும் உடலின் ஊடே படரும் கருப்புக் கோடுகளும் சூரிய ஓளியில் மிளிரும் காட்சியை பலமுறை எனது கேமரா கண்களில் பதிவு செய்துள்ளேன். உண்மையில் சிங்கத்தைவிட புலிகள்தான் அதிக வசீகரமானவை. அவற்றின் கூர்மையான பார்வை நெருங்குவதற்கு அல்ல பார்ப்பதற்கே நம்மை அச்சம் கொள்ளச் செய்திடும்.
பல காடுகளுக்குச் சென்று சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், செந்நாய், யானை, மான், பறவைகள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்தேன். ஆனால் புகைப்படம் எடுத்தல் என்பதோடு மட்டுமல்லாமல் வன உயிர்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் குறித்தும் பதிவு செய்யத் தொடங்கினேன். மனிதர்களைப் போலவே வன உயிர்களுக்கும் மூன்று முக்கிய தேவைகள் உள்ளன. உணவு, உறைவிடம், இனப்பெருக்கம். இதற்கான போராட்டங்கள், அதில் அவை காணும் வெற்றிகள் ஒவ்வொரு வன உயிரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது.
காடுகளுக்குள் பயணிப்பது போன்ற சாகசப் பயணம் அலாதி இன்பத்தைத் தந்தது. இதுபோன்ற பயணங்களை தனியாகச் செல்வதைவிட என்னைப் போன்று காடு, வன உயிர்கள் மீது ஆர்வமுள்ள நண்பர்களுடன் இணைந்து செல்கிறேன். இப்படியான பயணங்கள் குறித்தும் அதில் நான் பார்த்த வன உயிர்கள் குறித்தும் மற்றவருடன் பகிரும்போது பலரும் ஆர்வத்துடன் ஆச்சரியம் நிறைந்த விழிகள் அகலாது கவனிப்பார்கள். இது என்னை இன்னும் பரவசமடையச் செய்தது. சமூக வலைதளங்களில் நான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டபோது அதற்கு கிடைத்த வரவேற்பு இன்னும் அதிக உத்வேகத்துடன் நிறைய பயணிக்கத் தூண்டியது” என்கிறார்.
என்னதான் இயற்கை மீது காதல் இருப்பினும் விலங்குகளைக் கண்டால் அச்சமின்றி இருக்கமுடியுமா என்ற கேள்விக்கு, மனித செய்கையை கணிக்கமுடியாதபோது விலங்குகளின் செய்கையைக் கணித்திட முடியுமா என்ன. ஆனால் பறவையின் சத்தம், சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல் இவை எல்லாம் எனக்கு காட்டை மிக பரிச்சயம் ஆக்கியது. ஒரு பறவையின் குரல் எதற்கான சமிக்ஞை என்பதை அறிந்துகொண்டாலே போதும். அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நீங்கள் கணித்திடலாம்.
இதில் உள்ள மற்றொரு சவால் அமைதியாகக் காத்திருப்பது. உலகின் மிகப்பெரிய காத்திருப்பாளன் புகைப்படக் கலைஞன்தான். ஒரு புகைப்படம் என்பது, ஒளியின் மொழி. இந்த மொழியை எந்த நாட்டினரும், இனத்தினரும், மொழியினரும் தடையின்றி அறிந்துகொள்வார்கள். இதனை நாம் சரியாகத் தந்திடத் தருணங்கள் அமைய வேண்டுமெனில் காத்திருப்பு கட்டாயம். பல நாள்கள், பல நூறு மைல்கள் கடந்த பெரும் பயணத்தில் நமக்கான வினாடி எது என அறியாவிட்டாலும் அதற்கு தயாராக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். எனது கனவாக இருந்த கருஞ்சிறுத்தையை மூன்று வருடத் தேடலுக்கு பின்புதான் படமெடுத்தேன்.
ஒருமுறை கபினி வனப்பகுதியில் படமெடுக்க சென்றிருந்தபோது காட்டு நாய் ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த கண்ணியில் சிக்கிக்கொண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதனைக்கண்ட நான் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தேன். அவர்களும் வந்து அந்த நாய்க்கு உரிய சிகிச்சை அளித்தனர். எட்டு மாதங்கள் கழித்து அதே நாயை காயங்கள் ஆறிய நிலையில் மீண்டும் புகைப்படமெடுத்தேன். இது என் வாழ்வில் மறக்கவே முடியாத சம்பவம். என்னால் ஒரு காட்டு விலங்கு உயிர் பிழைத்திருக்கிறது என்று நினைத்து நிம்மதி அடைந்தேன்.
இதுவரை பென்ச், பந்திப்பூர், முதுமலை, கபினி, வயநாடு, நாகர்ஹோலே என இந்தியாவின் அனைத்து வனங்களுக்கும் பயணித்துள்ளேன். அதைக்கொண்டு தமிழில் எனது பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதே எனது ஆசை. எனது பயணங்களின் வாயிலாக வனங்களையும் அதன் வாழ்வியலையும் காக்க தொடர்ந்து பயணிப்பேன்.
இன்றைய சூழலில் காடுகள் காப்பாற்றப்பட்டால்தான் நாடு நலம் பெறும். காட்டின் விதிமுறைகளை மக்கள் மதிக்க வேண்டும். ஏனெனில் பல மாநில நெடுஞ்சாலைகள் காடுகளைக் கடந்துதான் போகின்றன. எனவே காட்டின் வழியாகச் செல்லும்போது வன உயிர்களைத் தொல்லை செய்யாமல் இருப்பது கட்டாயம். அதீத ஒலி எழுப்புவது, விலங்குகளிடம் விளையாடுவது, புகைப்படம் எடுப்பது அனைத்தும் தவறு. இது வன விலங்குகளை அச்சமடையச் செய்யும். இதன் காரணமாக அவை நம்மைத் தாக்க முயற்சிக்கலாம். ஆகையால் வன உயிர்களைத் தொல்லை செய்யாமல் அமைதியாக அவற்றை ரசியுங்கள். இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களும் வாழ்ந்திட வேண்டும். அதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம் என்று அவர் சொல்லி முடிக்கையில், அவரது கண்களில் அமைதியான பெரும் வனம் ஒன்று தெரிந்தது.