திண்டுக்கல்: பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி நடத்தி வருபவர் ஜோதிமுருகன்.
இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவரது பாலியல் சீண்டல்கள் அதிகரிக்கவே பொறுத்துக்கொள்ள இயலாத மாணவிகள் தங்களது பெற்றோருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று (நவ.19) காலை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கல்லூரிக்குச் சென்று, நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு ஆதரவாக விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி விடுதியை விட்டு வெளியேறி திண்டுக்கல் பழநி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநிவாசன், வருவாய் துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விடுதி காப்பாளர் கைது
தாளாளர் ஜோதிமுருகன், விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி மாணவ மாணவிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திண்டுக்கல்-பழநி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி விடுதி காப்பாளர் அர்சனாவை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை தேடி வருகின்றனர். விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் - ரூ.33 லட்சம் பணம், 213 சவரன் நகையை எடுத்து சென்ற மகன்!