திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஐந்து வயது முதலே கோடிங்கை (coding) கற்றுவரும் பிரனேஷ், தற்போது வாட்ஸ்அப்க்கு போட்டியாக ஜெட் லைவ் சாட் என்ற அட்டகாசமான ஒரு செயலியை (App) உருவாக்கியுள்ளார். இந்த செயலியை உருவாக்கிய பின்னர் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அங்கீகரித்தனர். ஜெட் லைவ் சாட் செயலிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பிரனேஷ், " சிறுவயது முதலே எனக்கு செல்போன்களை பயன்படுத்துவது மிகவும் பிடிக்கும். செல்போன்களை பயன்படுத்துகையில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளை காணும்போது நாமும் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே இப்படி ஒரு செயலியை உருவாக்க என்ன தேவை என ஆராய்ந்து கோடிங் படிக்க வேண்டும் என தெரிந்துகொண்டேன்.
தொடர்ந்து நான் நன்றாக செயல்பட அனைவரும் ஊக்குவித்தனர். பயிற்சி மற்றும் எனது முயற்சி, என் குடும்பத்தாரின் ஊக்குவிப்பு என அனைத்தும் என்னை இந்த செயலியை மிக விரைவாக உருவாக்கிட காரணமாக அமைந்தது " என்றார்.
வாட்ஸ்அப் போல் இல்லாமல் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 15 பேருக்கு அனுப்பும் வசதி, பெரிய பைல்களையும் மற்றவர்களுடன் எளிதில் ஷேர் செய்யும் வசதி என பல வசதிகளை இந்தச் செயலி கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஒருவர் அனுப்பும் தகவல்கள், குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் தானாக மறைந்திடும் வகையில் disappearing message என்ற option இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்முறையாக நோட் டூ செல்ஃப் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அனுப்பும் விஷயங்களில் உங்களுக்குத் தேவையான தனிப்பட்ட சாட்டுகள் (Chating), புகைப்படம் வீடியோ, ஆடியோ போன்ற விருப்பமானவற்றை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இப்படி ஏகப்பட்ட வசதிகளை கொண்டுள்ள இந்தச் செயலியை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, செப்டம்பர் முதல் வாரம் வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலியை கண்டுபிடிக்க எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. இது என்னுடைய செயலி என்பதை விட இந்தியாவின் செயலி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார் பிரனேஷ்.
மாணவர் பிரனேஷ் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் விதமாக அவர் பயிலும் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், மாணவர் பிரனேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பிரனேஷை பாராட்டி கேடயம் வழங்கிய பரமசிவம், மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் வகையில் கணினி ஒன்றை வாங்கி தானே பரிசளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
தன்னைப்போலவே பல மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் தீராத தேடல்களை கொண்டுள்ளதாகக் கூறும் பிரனேஷ், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!