திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மீனாட்சிநாயக்கன்பட்டி, பெரியகோட்டை ஊராட்சி கோமையன்பட்டி ஆகியப் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு மக்களுக்கு செய்துவரும் நலத்திட்ட உதவிகளைப் பட்டியலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது விழா மேடைக்கு முன்பு கூட்டத்தில் நின்றிருந்த பொதுமக்களில் ஒருவர் மதுபோதையில் அமைச்சரிடம், 'பொங்கல் பரிசு வாங்க... தனக்கு ரேசன் கார்டு கூப்பன் தரவில்லை' என்று கேட்டார்.
'டாஸ்மாக் பெரிய கொடுமையா போச்சு':
அதற்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், "நீ ஒன்று பழகிக்கொள். நான் மேடையில் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது. கீழே இறங்கி வரும்பொழுது என்னிடம் கேட்கலாம். நீ போட்டிருக்கும் தண்ணிக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். இந்த டாஸ்மாக் பெரிய கொடுமையா போச்சு.
இதுபோன்ற மது அருந்தும் நபர் உள்ள குடும்பங்களுக்கு அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பணம் டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே கிடைத்துவிடும். அதேபோல் வேட்டி, சேலை, கரும்பு, அரிசி, பருப்பு போன்றவை தாய்மார்களுக்குச் சென்றுவிடும்" என்று கூறினார். இதனிடையே அரசு வழங்கும் பொங்கல் தொகை டாஸ்மாக் மூலம் திரும்பப் பெறுவதாக அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர்:
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் நேற்று (ஜன. 04) தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய், அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், 'பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொங்கல் பரிசுடன் ஆவின் நெய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஜன.05 முதல் பொதுமக்களுக்கு நெய்யும் சேர்த்து வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
மேடையில் உளறிய அமைச்சர்:
திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று விமர்சித்து கூறுவதற்குப் பதிலாக, 'ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நடத்துவோம்' எனக் கூறி வருவதாக அமைச்சர் உளறிப்பேசினார்.
மேலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களை நீட்தேர்வு எழுதாமல் டாக்டர் ஆக்குவேன் எனக் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 316 மாணவர்கள் டாக்டராக உள்ளனர் என மீண்டும் உளறி கொட்டினார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி, உரிய தகுதிபெற்றால் மட்டுமே 7.5% இடஒதுக்கீட்டை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பயன்படுத்தி, மருத்துவராக முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுப்படி 3 மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு!