திண்டுக்கல் மாவட்டம், நம் தீரா காம்பாக்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த போட்டி (Wrestling Tournament for Under 17s) இன்று (ஜன.30) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் ரோகிணி 53 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும், சங்கீதா 73 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும், இலக்கிய கலைச்செல்வி 65 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும், மதுமிதா 40 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்று அசத்தினர்.
அதேபோல, நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவன் தினேஷ்குமார் 71 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ராஜேஸ்வரி 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும், பாரத் வித்யா பவன் பள்ளி மாணவன் தரணி நாதன் 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். நவீன் பாரதி, ஞான சரஸ்வதி, நித்தீஸ்வரி ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.
மேலும், இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மூன்று பேர் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த கழகம் சார்பாக தேசிய அளவிளான போட்டிக்குத் தேர்வு செய்யபட்டுள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளை திண்டுக்கல் மல்யுத்த கழகம் சார்பில் ஆசிரியர், பெற்றோர், பயிற்சியாளர் முகமது அசாருதீன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!