திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கொடைரோடு ரயில்வே காவல் துறையினர், உடல் சிதறிக் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
ஆதார் மற்றும் டைரி குறிப்பை ஆய்வு செய்தபோது தற்கொலை செய்துகொண்டது திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்தரபாரதி (50), மனைவி சங்கீதா (43), பிள்ளைகள் அபினயஸ்ரீ (15), ஆகாஸ்(12) என்பது தெரியவந்தது. உத்தரபாரதி சுயத்தொழில் செய்து வந்ததாகவும், தொழிலில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..
மேலும், அவர்களில் ஒருவர் சட்டைப் பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டும், கொடைரோட்டிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்ற பேருந்தின் பயணச்சீட்டுகளும் இருந்துள்ளது. இதனை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
கடன் பிரச்னை காரணமாக கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.