திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 4) ஒரே நாளில் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் கொலை மாவட்டமாக மாறுகிறதா எனப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் முருகபவனம் அருகே லோடுமேன் சிவக்குமார் என்பவரின் மகன் பிரபாகர் (20) பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக் கிழமை (ஜூன் 3) இரவு வேலை முடித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து கழுத்து அறுத்து பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்தக் கொலை குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
இதேபோல் அதே நாள் இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உள்பட்ட கதிரயன் குளம் அருகே முன் விரோதம் காரணமாக சிவா என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பழனி அருகே சொத்து தகராறில் மகேந்திரன் என்ற விவசாயியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவமானது அரங்கேறி குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவமானது அரங்கேறி காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. மூன்று இடங்களில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அடித்துக் கொன்ற கணவர் கைது