திண்டுக்கல்: திண்டுக்கல் எருமைக்கார தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர், திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மணிகண்டன் கடையில் இருந்தார். அப்போது 4 மோட்டர் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், கடைக்குள் புகுந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனின் கடையில் வேலை பார்த்த பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் சுந்தர பாண்டியன்(39), சத்திய கீர்த்தி(29) ஆகியோர் தங்களது உறவினர்கள் 6 பேருடன் இணைந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களது செல்போன் எண்களை கண்காணித்தபோது, பழனி பை-பாஸ் சாலையில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர், அங்கு விரைந்த காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
குற்றவாளியின் வாக்குமூலம்
கொலைக்கு மூளையாக செயல்பட்ட சுந்தரபாண்டியன் காவல்துறையினரிடம், " எனது தந்தை பெருமாள் மணிகண்டனின் கடையில் வேலை பார்த்தார். அவருக்கு வயது மூப்பு ஏற்பட்டதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு மணிகண்டன் நிறுத்தினார்.
அப்போது, எனது தந்தையிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தார். 10 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வேலை பார்த்த தந்தைக்கு அவர் கொடுத்த தொகை மிகக் குறைவு. இதனால் நானும் எனது தம்பியும் அவரிடம் இது குறித்து கேட்டோம். அப்போது, எனது தந்தைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் அல்லது கடையில் ஒரு பங்குதாரராக அவரையோ அல்லது எங்களையோ சேர்க்க வேண்டும் என்று கூறினோம்.
அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக எங்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. எனவேபணத்தை கொடுக்காத மணிகண்டனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.
அதன்படி நேற்று முன்தினம் எங்களின் உறவினர்களான திண்டுக்கல் சிலுவத்தூரை சேர்ந்த சின்னையா (29), பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பாண்டி (29), அன்பழகன் (20), பெருமாள் (23), நல்லாம்பட்டியை சேர்ந்த கணேசன் (35), பஞ்சம்பட்டியை சேர்ந்த கருப்பையா (24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிள்களில் மணிகண்டனின் கடைக்கு சென்று அவரை கொலை செய்தோம்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டா கத்தி முனையில் 20 செல்போன்கள் திருட்டு