திண்டுக்கல்: திண்டுக்கல் உணவுத்திருவிழாவில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திட்டமிட்டு பீஃப் பிரியாணியை ஓரம் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெறும் உணவுத்திருவிழாக்களில் கட்டாயம் பீஃப் உணவு வகைகள் இடம்பெற வேண்டும்; அதனை புறக்கணிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு பிறப்பித்ததது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற சில முக்கிய உணவகங்களுக்கு மட்டுமே உணவுத்திருவிழாவில் ஸ்டால்கள் அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பீஃப் பிரியாணி மற்றும் உணவு விற்பனையாளர்களின் கடைகளுக்கு உரிய அழைப்புவிடுக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இருந்தால் நிச்சயமாக அவர்களும் பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பீஃப் பிரியாணி விற்பனைக்காக வைத்திருப்பார்கள். இந்தச்சம்பவமானது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என அங்கிருந்த பிரியாணி ஆர்வலர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட உணவுத்துறை அலுவலர்கள், உணவுத்திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறச்செய்தால் மற்ற உணவு விரும்புபவர்கள் சங்கடப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டு, இந்த சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மையான உணவாக இருக்கக்கூடிய பீஃப் பிரியாணிக்கு வேண்டுமென்றே தடைவித்துள்ளனர் என உணவுக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட இந்த மாவட்ட உணவுத்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் நடைபெறும் உணவுத்திருவிழாக்களில் பீஃப் உணவு வகைகள் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும் எனவும், இதுபோன்று செயல்பட்ட அலுவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்'- வடிவேலுவின் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்!