திண்டுக்கல் மாவட்டதின் முக்கிய சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் இருந்துவருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க பல்வேறு இடங்கள் அமைந்துள்ளது. ஆனால் கரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சுற்றுலா முழுவதுமாக முடங்கியது.
இந்நிலையில், தமிழழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம், உள் மாவட்ட சுற்றுலாப் பயணிகள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.
இதில், முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை முதல் திறக்கப்படும். தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற சுற்றுலாத் தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொடைக்கானலில் 6 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த முக்கிய சுற்றுலாப் பகுதியான பிரையண்ட் பார்க், ரோஜா பூங்கா சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க இன்று (செப்டம்பர் 9) முதல் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களை அலங்கரிக்கும் பணி, சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களையும் திறக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.