திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 111 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 86 பேர் நலமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீதமுள்ள 24 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனிடையே கரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளையும் முறையான பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், முகாம்களில் உள்ள நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல், வெளியேற்றுதலில் முறையான நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகளை தனியாக பிரித்து மஞ்சள் நிறப் பைகளில் சேகரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உபயோகித்த கையுறைகள், முகக் கவசங்களை அகற்றுவதற்கு முன்பாக 72 மணி நேரம் காகிதப் பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொதுக் கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பிறர் உபயோகிக்க முடியாத அளவிற்கு வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற வேண்டும். மேலும் பிற கழிவுகளுடன் கரோனா தொற்றுள்ள நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ சேமிக்கவோ கூடாது' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... வீட்டில் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவக் கழிவை வைக்கக்கூடாது