திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமாகும். இந்நிலையில் கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்திருந்த நிலையில் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கொடைக்கானல் வருவதற்காக இ-பாஸுக்கு விண்ணப்பித்தால் காலதாமதம் ஆவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் வெகு நேரம் காத்திருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் பேருந்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் இல்லை என இறக்கிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வெள்ளி அருவி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலும் இ-பாஸ் பெற்றுவரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா பரிசோதனைக்குப் பிறகே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான குளறுபடிகள் நீடித்துவருவதால் இ-பாஸ் முறையை ரத்துசெய்ய வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.