திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்குப் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜனவரி 9) வரை மூன்று நாட்களுக்குப் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பழனிக்குப் பாதயாத்திரையாக வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் கிரிவலம் சுற்றி வந்து அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் சென்று சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று (ஜனவரி 10) அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த மூன்று நாட்களாகச் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததாலும், பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழனியிலேயே தங்கி சாமிதரிசனம் செய்ததாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே தைப்பூசம் முடியும் வரை பழனி கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி!