அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். தற்போது கரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மலையடிவாரத்தில் கிரி வீதி, சன்னதி ரோடு உள்ளிட்ட இடங்கள் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் இதே நிலை நீடிக்கக் கூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் வருகை தராததால் மலையடிவாரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது மலையடிவாரத்தில் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது, இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளையும் அடைக்க வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.