திண்டுக்கல்லுக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பால் கொள்முதலுக்கு ரூபாய் நான்கு உயர்த்தி விட்டு, விற்பனையில் ஆறு ரூபாய் உயர்த்திருப்பதற்கான அவசியம் என்ன?முழுக்க முழுக்க வியாபார நோக்கில் அரசு பால் விலையை உயர்த்தி உள்ளது. மக்களுக்கான எந்த ஒரு திட்டமும் மாநில அரசிடம் கிடையாது.
வேலூர் தேர்தலில் ஆளும் கட்சியினருக்குச் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கூறும் முதலமைச்சர், உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும். மழையினால் நீலகிரி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதைப் பார்க்க வேண்டும் என்ற அக்கறை முதலமைச்சருக்கு கிடையாது. தற்போது பெய்த மழையினால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்க்க ஒரு மத்திய அமைச்சர் கூட கேரளாவிற்குச் செல்லவில்லை.
மேலும், மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் செயல்பாட்டினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காகவே மோசமான மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு உடனடியாக குடியரசுத் தலைவரும் அனுமதியளித்து வருகிறார். மோடி ஆட்சி வந்த பிறகு விவசாயம் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தியாவைத் தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.