திண்டுக்கல்: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவில் 99.5 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் 0.5 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில், கொடைக்கானலைச் சேர்ந்த சுதீஷ் புது முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
மன உளைச்சல் பதிவுகளைக் கண்டு அதிர்ச்சி
கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், சுதீஷ். கொடைக்கானலில் காட்டேஜ்கள் வைத்து இயக்கி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், கேரளாவில் நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள், மிகுந்த மன உளைச்சலான பதிவுகளை, சமூக வலைதளங்களில் பதிவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தோல்வியடைந்தோருக்கு இலவச அறை
இதனையடுத்து மாணவர்களின் மனஉளைச்சலைப் போக்கும் வகையில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் அறைகளை இலவசமாகத் தருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
சமூக வலைதளங்களில் பதிவிட்ட உடனேயே, பதிவு வைரலாகத் தொடங்கியது. இதனால் பலரும், சுதீஷைத் தொடர்பு கொண்டு அறைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தோல்வி முடிவல்ல...
இதுகுறித்து அவர் பேசுகையில், "பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தால், அது வாழ்வின் முடிவு இல்லை. தோல்வி அடைந்தவர்கள், உலகில் பல இடங்களில் சாதித்துள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் தோல்வி அடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக, இங்கு சில நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என்றார்.
பலதரப்பிலிருந்தும் குவியும் பாராட்டு
தற்போது சிறுசிறு பிரச்னைகளுக்கெல்லாம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்களின் மனஉளைச்சலைப் போக்க, சமூக வலைதளத்தின் உதவியுடன் சுதீஷ் மேற்கொண்டுள்ள முயற்சி பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம்?