கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் கடந்த சில மாதங்களாக நூல் கிடைக்காமல் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இந்நிலையில், பட்டு நெசவு மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில், கரோனா தொற்று நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெறாத நெசவாளர்கள் மற்றும் 2 ஆயிரம் யுனிட் விலையில்லா மின்சாரத் திட்டத்தில் பயன்பெற்றுவரும் நெசவாளர்களுக்கு இந்த கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
மேலும் இந்த நிவாரணத்தைப் பெற விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டை நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், தமிழ்நாடு மின்வாரிய அட்டை, கடைசியாகச் செலுத்திய மின் கட்டண ரசீது நகல் ஆகியவற்றுடன் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு நெசவாளர்கள் 04512440517 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.