பழனியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் கண்டறியப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் 14 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஐந்து பேரும் பூரண குணமடைந்தனர். குணமடைந்தவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த தகவலை அறிந்து பழனி அண்ணாநகரில் வசிக்கக்கூடிய தெரு மக்கள் நேற்று இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தெருவுக்குள் வரக்கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பழனி அரசு மருத்துவமனையில் அந்த நபரை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் பாதுகாத்து வந்தனர்.
தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இச்சூழலில் இன்று காலை பழனி சார் ஆட்சியரும், காவல் துறை அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் குணமடைந்த நபருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, வெளியே நடமாடமாட்டார் என்றும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்பதையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறினார்.
மேலும் பழனி அண்ணா நகரில் பிரச்னையைத் தவிர்க்க கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிஐஜி நிர்மல்குமார் ஜோசி சீல் வைக்கப்பட்டுள்ள அண்ணா நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர் காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு வீட்டில் விடப்பட்டார். இதனால் பழனி அண்ணா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.