விடுமுறைகள் கிடைத்ததும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு புறப்பட்டுவிடுகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவி வருவதன் எதிரொலியாக சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பழனி - கொடைக்கானல் மலை சாலையும் மூடப்பட்டது. பழனி புளியமரத்து செட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை சாவடியில், கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தச் சோதனையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதியில்லை என வாகன ஓட்டிகளிடம் தெரிவிக்கப்பட்டது. உரிமங்களை சோதித்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், கரோனா வைரஸ் பரவலையும் கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் சுற்றுலா செல்வதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த அலட்சியப் போக்கு ஆபத்தானது என உணர்ந்த காவல்துறை, சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கொடைக்கானலை வசிப்பிடமாகக் கொண்டவர்களை மட்டும் உரிய ஆவணங்களை பார்த்த பின்பு காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனிடையே, கொடைக்கானல் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அழைத்துச்செல்ல வந்த பெற்றோர்கள் மலை சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டுகோள் வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா: பழனி கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை