திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே பகல், இரவு நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகள் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை முதலே கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், ஆனந்தகிரி, அண்ணா நகர், செண்பகனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்டப் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானலில் மழை தொடர்ந்து வருவதால் குளிரும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் முதல் அடுக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து தவித்துவருகின்றன.
இதனை சரி செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடைக்கானல் மலைச்சாலையில் பயணம் மேற்கொள்ளும்போது பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை