திண்டுக்கல்: ரெட்டியார் சத்திரம் பகுதியில் இயங்கிவருகிறது இந்தோ - இஸ்ரேல் தொழில்நுட்ப காய்கறி மகத்துவ மையம். இதில் பல வகையான காய்கனிகள் உயர் தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட காய்கனி விதைகளை நடவுசெய்து அவைகளை வளர்த்து அந்த நாற்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் முதல்முறையாக சோதனை முயற்சியில் கோகோ விதைகளை பொள்ளாச்சி சேத்துமடைப் பகுதியிலிருந்து வாங்கிவந்து இந்தோ - இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப முறையில் அவற்றினை பசுமை குடில் மூலம் பாதுகாத்து நடவுசெய்து மூன்று மாத கோகோ செடி கன்றுகளை வளர்த்து தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.
பொதுவாகவே கோகோ பயிர் அதிக வெப்பம் இல்லாத மிதமான குளிர் சூழலில் வளரக்கூடிய நிழல் பயிராகும். எனவே இந்த கோகோ கன்றுகளை கொடைக்கானல், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் அலுவலகம் மூலம் தோட்டக்கலை பண்ணையில் இலவசமாக கோகோ கன்றுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அலுவலகத்தில் பதிவுசெய்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நில ஆவணங்களைச் சரிபார்த்து வேளாண் நிலத்திற்கு ஏற்றவாறு கோகோ கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக இந்தோ - இஸ்ரேஸ் மைய அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகளா? முதலமைச்சர் நாளை ஆலோசனை