திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக, 2 மாதங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
தற்பொழுது தமிழ்நாட்டில் தொற்று தீவிரம் குறைந்து வருவதால், ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வருகின்ற திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அனைத்தும் திறக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுத்தம் செய்யும் பணி
இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கலில், சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், திண்டுக்கல்லில் உள்ள அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
முன்னெச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்யும் வகையில், தரையில் வர்ணங்கள் மூலம் வட்டங்கள் போடப்பட்டுள்ளது.
கோயிலில் ஆங்காங்கே “முகக்கவசம் அணியுங்கள்; தகுந்த இடைவெளியைப் பின்பற்றுங்கள்; கைகளை அடிக்கடி கழுவுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதேபோல் அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்து கோயில்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: டிடிவி தினகரன், சசிகலா விசுவாசி இப்போது அறிவாலயத்தில்