உடுமலைப்பேட்டையில் கடந்த 2016ஆம் ஆண்டு பட்டப்பகலில் சாதி மறுப்புத் திருமணம் செய்த சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சங்கர் வெட்டிக் கொலை செய்யப்படும் காட்சி சிசிடிவியில் பதிவாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், கெளசல்யா ரத்தக் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சாதி ஆணவக் கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் தனலட்சுமி, தாய்மாமன் பாண்டிதுரை உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கௌசல்யாவின் தாய் தனலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பெயரில் இன்று (ஜூன் 22) தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேரின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து கௌசல்யாவின் தாயார் தனலட்சுமி கூறியதாவது, 'நீதிமன்றம் தற்போது வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், 5 பேரும் விரைவில் விடுதலையாகி வருவார்கள் என நம்புகிறேன். இறைவனிடம் வேண்டியது நிறைவேறியுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா? - பா. ரஞ்சித்