திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர், வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து காவல் துறையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள் தியாகராஜன், குமரேசன் மற்றும் காவலர் சுந்தர் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை நிறுத்தி காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததும், வாகனப்பதிவு புத்தகம் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது பெயர் அராபத் என்றும், தன்னுடைய தந்தை பெயர் சாதிக் என்றும் தெரிவித்துவிட்டு, முகவரியைக் கூற மறுத்துள்ளார்.
இதனையடுத்து அவரது வாகனத்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறையினர், அது தொடர்பான ரசீதையும் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ரசீதைப் பெற்றுச் சென்ற அராபத், சிறிது நேரத்தில் மேலும் இருவரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவலரைக் கண்டதும், ஹோட்டலுக்குள் சென்று அவர்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து தாக்க முயன்றுள்ளனர்.
தொடர்ந்து காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரும், வெளியே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த போக்குவரத்து காவலர்களின் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி சாலையின் நடுவில் இழுத்து போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர காவல் துறையினர், சேதமடைந்த போக்குவரத்து காவலர்களின் இருசக்கர வாகனங்களை மீட்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போக்குவரத்து காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அராபத் உள்பட 3 பேர் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்..