திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீரைப் பிடித்து வருகின்றனர்.
தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தினால் அப்பகுதி மக்கள் இரண்டு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனிடையே நேற்று காலை அனுமந்தராயன் கோட்டை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலையில் வீணாகும் நீரை வடிகட்டி எடுத்துச் சென்றனர். குழந்தைகளுடன் வந்து பெண்கள், முதியவர்கள் என அனைவரும் போட்டி போட்டு தண்ணீரைப் பிடித்து சைக்கிள், தள்ளுவண்டிகளில் எடுத்து சென்றனர்.
மேலும், காலை உடைந்த குடிநீர் குழாய் தாமதமாக சரிசெய்யப்பட்டதால் அதிக அளவிலான குடிநீர் வீணாகியுள்ளது. மக்களின் அன்றாட தேவைக்கு வழங்க வேண்டிய குடிநீர் வழங்கப்படாமல் உள்ள நிலையில், இந்த நீரும் வீணாவது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.