மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை முறையாக செயல்படவிடாமல் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுவதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பின் தொடர்ந்து சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு உரிய மரியாதைத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண் உள்ளாட்சி பபிரதிநிதி தரையில் அமர வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதுபோன்ற, சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுத்து, சாதிய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அவல நிலையை ஆய்வுசெய்து தடுத்திட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்பாட்டாளர்கள் அடங்கிய குழு அமைக்க வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த, ஜி.குரும்பபட்டி 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் (மனித வேடத்தில் இருக்கும் மிருகங்கள்) மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு வழக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.