தூத்துக்குடி: மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி இன்று வழக்கின் வாதி, பிரதிவாதி இருவருக்கும் வெற்றி என்ற அடிப்படையில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைமை நீதிபதி லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப பிரச்னை வழக்குகள், கரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகள் என மொத்தம் 131 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன், கரோனா ஊரடங்கு காலத்தில் குடும்ப பிரச்னைகள் அதிகரித்து விட்டன; அது சார்ந்த வழக்குகளும் பெருகி விட்டது. குடும்ப பிரச்னைகளை சமரச தீர்வு மையத்தில் மூலமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதேபோல், திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். 4 சிறப்பு அமர்வு மூலம், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் புவனேஷ்வரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் (பொறுப்பு) செல்வகுமார், சார்பு நீதிபதி பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணை செய்தனர்.
காசோலை, வாராக்கடன், நிலுவையில் உள்ள விபத்து மற்றும் நஷ்டஈடு, இன்சூரன்ஸ் மூலம் கிடைக்க வேண்டிய காசோலை வழக்குகள் என 139 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 64 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 3 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 466 ரூபாய் தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது.
இந்தச் சிறப்பு முகாமில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் குணசேகரன் (29) என்பவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி விபத்து காப்பிட்டுத் தொகைக்கான காசோலையை உயிரிழந்தவரின் மனைவி மாரியம்மாளிடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஜமுனா வழங்கினார்.
இதையும் படிங்க : பல நாள் பிரச்னையை, ஒரு சில மணிநேரத்தில் தீர்த்த காவல் ஆய்வாளர்!