திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது. இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை ஆகிய கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள செண்பகனூர், குண்டு பட்டி மற்றும் கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமை குடில்கள் அமைத்து கார்னேஷன் பூக்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இங்கு நடவு செய்யப்படும் கார்னேஷன் பூக்கள், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கிற்குப் பிறகு பசுமை குடில்கள் அமைத்து கார்னேஷன் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தற்போது மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் மலர் சாகுபடியில் இறங்கி உள்ளனர்.
இதில் வரும் இந்த கார்னேஷன் பூக்கள் ஆரஞ்சு, சிகப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த நிலையில் இன்று (பிப்.14) உலக காதலர் தினத்தை ஒட்டி, கொடக்கானலில் சாகுபடி செய்யப்படும் கார்னேஷன் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
அதேநேரம் கரோனா ஊரடங்கிற்கு முன்பு மலர் ஒன்றுக்கு 3 ரூபாய் முதல் விற்பனையாகி வந்தது. ஆனால், தற்போது காதலர் தினத்தை ஒட்டி கார்னேஷன் பூக்கள் ஒன்றுக்கு 15 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கார்னேஷன் பூக்களை சாகுபடி செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் சிகப்பு நிற பூக்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கார்னேஷன் பூக்கள் விற்கப்படும் இடங்களில் காதலர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Valentines Day: பிரதமருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூங்கொத்து பரிசு!