திண்டுக்கல்: கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம், சி.ஆர்.பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ஸ்டெட் (36). இவர் இசை ஆசிரியராக கர்நாடகாவில் பணி செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் திருமணம் செய்துள்ளார்.
அவரது மனைவி வீடான பட்டிவீரன்பட்டியில் கடந்த மூன்று மாதங்களாக (மனைவியின் பிரசவத்திற்காக) தங்கி உள்ளார். இதனிடையே திண்டுக்கல் ஆர்.எம் காலணியில் 80 அடி பிரதான சாலையில் உள்ள பிரபல உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சிக்கு வந்து சென்றுள்ளார்.
வழக்கம்போல நேற்று உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி செய்ய வந்த ரமேஷ், 80 அடி சாலையில் ஓரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கார் எஞ்சினில் புகை வெளியேறியது சிறிது நேரத்தில் புகை அதிகமாகி தீ பற்றியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் காரின் எஞ்சின் பகுதி மற்றும் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருந்ததால், காரின் மின் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு