கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இந்தக் கழிவறையை தூத்துக்குடியை சேர்ந்த ஆல்பர்ட் என்ற நபர் டெண்டர் மூலம் நடத்தி வந்த நிலையில் தொடர்ந்து நடத்த முடியாததால் தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆரோக்கியதாஸ்(60) வசம் சப்-லீசுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். ஜான்சன் ஆரோக்கியதாஸ் சொந்த உறவுக்காரர் போல் உடன் பழகி வந்த சரவணனிடம்(30) பெருந்தொகையை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பல மாதங்களாக இந்தத் தொகையை சரவணன் அவரிடம் திருப்பி கேட்டு வந்த நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸ் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் அவருடனேயே பசுமைபள்ளத்தாக்கு பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தங்கி கழிவறை வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலையிலிருந்தே பணம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது நேரத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சரவணன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸை கத்தியால் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜான்சன்ஆரோக்கியதாஸ் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை அறிந்த சரவணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் துறையினர் ஜான்சன் ஆரோக்கியதாஸ் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி கானா விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவர் மீதும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: